கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டை பூட்டி விட்டு தலைமறைவான கிராம மக்கள்!

பேராவூரணி அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த சொர்ணக்காடு மற்றும் கழனிவாசலில் கடந்த 22-ம் தேதி கொரோனாதொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சொர்ணக்காட்டில் 12 பேருக்கும், கழனிவாசலில் 28 பேருக்கும், பேராவூரணி அருகே உள்ள வீரராகவபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பரிசோதனை முடிவுகள் தவறாக வந்துள்ளதாக சந்தேகம் உள்ளது. எங்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் இல்லை. எனவே, சிகிச்சைக்கு வர முடியாது என்று ஆம்புலன்ஸுடன் வந்த மருத்துவ குழுவினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமையில், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று உறுதியானால் மட்டுமே சிகிச்சைக்கு வரமுடியும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நேரத்தில், அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டதை அறிந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 28 பேரும் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.