புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்; மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் குட்டு!

Story Highlights
  • புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்
  • சொந்த ஊருக்கு திரும்ப 15 நாட்களுக்குள் ரயில் வசதி
  • சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச்  24 இல், மத்திய அரசு, எந்த அவகாசமும் இன்றி, வெறும் 3 மணி நேரத்தில், நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தது. இதனால், வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

வேலை செய்து வந்த இடத்திலும் உணவு கிடைக்காததால், வேறுவழியின்றி பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே செல்ல ஆரம்பித்தனர். கர்ப்பிணிகள் சாலையில் குழந்தையை ஈன்றெடுத்ததும், பலர் சாலையிலேயே சுருண்டு விழுந்து இறந்ததும், முதியவர்களை அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் சுமந்து சென்றதும் காண்போரை கதிகலங்க செய்தன.

புலம்பெயர் தொழிலாளர்களை காப்பாற்றக்கோரி உலகளாவிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் பாராமுகமாய் நடந்துகொண்டது. அதுமட்டுமின்றி, ஊரடங்கை மீறி வெளியில் நடமாடியதாக கூறி, 1 வருட ஜெயில் தண்டனையை பெற்று தரும் வகையிலான வழக்கு, புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்டது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டே தாமாக முன்வந்து, “புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையும் துயரமும்” என்ற பெயரில் மே 26-ந் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

  • சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களை ரெயில்கள் அல்லது பேருந்துகள் மூலம், சொந்த ஊர்களுக்கு 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புக்கான உதவி மையங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டமாக நின்ற தொழிலாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
    இவ்வாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x