டாஸ்மாக்கில் மது பாட்டிலை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்ட தலைமை காவலர்!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக்கில் போக்குவரத்து தலைமை காவலர் மது பாட்டிலை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேடல் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக்கில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் முருகனும் அவரது உறவினரும் மது வாங்க சென்றிருக்கிறார்கள்.
அப்போது மது விற்பனையாளருக்கும், தலைமை காவலர் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காவலர் முருகன் தகாத வார்த்தையில் கடையின் விற்பனையாளரை பேசி கையில் வைத்திருந்த மது பாட்டிலை கடைக்குள் எறிய முயற்சி செய்தார். இதனை கடை விற்பனையாளர் தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் தாம் கடைகாரரிடம் தகராறு செய்யவில்லை என்றும், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்ததால் அதற்கு விளக்கம் கேட்டபோது, சம்பந்தமில்லாமல் வெளிநபர் தன்னிடம் பிரச்சனை செய்ததாகவும் , அதனால் ஆத்திரத்தில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் காவலர் முருகன் விளக்கம் அளித்துள்ளார்.