மீண்டும் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்த கயவர்கள்! தலைவர்கள் கடும் கண்டனம்!!

மீண்டும் திருச்சியில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்த விவகாரம் முடிந்து சகஜ நிலை திரும்பிய நிலையில் திருச்சியில் மீண்டும் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. திருச்சி அருகே இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் இரவோடு இரவாக வந்து காவி சாயம் பூசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்.

அது போல் திமுக எம்.பி கனிமொழியும் பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும்.. மரியாதையா ? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா?” என கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x