இனி விவசாயிகள், ‘பிரதமரின் பொய் வார்த்தைகளை நம்ப தயாராக இல்லை’ என்பதே இந்த போராட்டத்தின் அடிநாதம்!

இந்தியா முழுக்கவே கடந்த ஒரு வாரமாக ஒரு பிரச்சனை பேசப்பட்டு வருகிறது. அதில் விவசாயம், விவசாயி என்கிற வார்த்தைகளை தாண்டி நமக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் நாடு முழுக்க இது மிக பெரிய விவாத பொருளாகவும், விவசாயிகள் இந்த கொரோனா காலகட்டத்திலும் நேரம் பார்க்காமல் வீதிகளுக்கு போராடவும் வந்து விட்டார்கள். அப்படி என்ன தான் பிரச்சனை. ஒரு சாமானியராக நமக்கு  இருக்கும் கேள்விகளுக்கு விவசாய சங்க தலைவர் சண்முகம் (மாநில பொது செயலாளர், AIKS) பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில். “விவசாயிகளுக்கு எதிராக ஒரு சட்டம் வந்திருக்கிறது என்று நாடு முழுக்க போராட்டம் நடக்கின்றது? அப்படி என்ன தான் சட்டம் என்பதே நம்மவர்களின் கேள்வியாக உள்ளது. அதற்கு பதில் இதுதான்! இந்தியாவில் எந்த வித சட்டம் கொண்டு வந்தாலும், நம் மனதில் 85 % சிறு விவசாயிகள் என்று கணக்கில் கொள்ள வேண்டும். இந்த 85% விவசாயிகளுக்கு இந்த சட்டம் உதவுமா, உதவாதா என்பதை கணக்கில் கொண்டு தான் மத்திய , மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும். அப்படி எந்த வித அடிப்படையும் இல்லாமல் கார்பரேட் நலன்களை மட்டும் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமே இந்த 3 சட்டங்கள்.

1.அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020.

2.வேளாண் விலை பொருள் விற்பனை சட்டம்.

3.விலை உத்திரவாதம் மற்றும் ஒப்பந்த சாகுபடி சட்டம்.

இந்த மூன்று சட்டங்களும் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கிறது. இது மூன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டது என்பதாலே இதை அவசர சட்டமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதே கேள்வி, அத்தியாவச பொருட்கள் திருத்த சட்டத்தை பொருத்த வரை மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் , உருளை கிழங்கு போன்றவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்குகிறது. இவை வர்த்தகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து சேமித்து வைக்கலாம் என்கிறது. இதை ‘பதுக்கல்’ என்று சொல்லவில்லை. இந்த சுதந்திரத்தை வர்த்தககர்ளிடம் கொடுப்பதே இந்த சட்டம். இதற்கான காரணமாக அரசு சொல்வது, வர்த்தகர்கள் குளிர் சாதன வசதியை வைத்து இருப்பதாலும் அரசிடம் போதிய வசதி இல்லை என்பதாலும் இந்த ஏற்பாடு என்கிறது.

எங்கள் கவலை என்பது மகசூல் நேரத்தில் எப்போதும் விலை குறைவாக தான் இருக்கும், இந்த நேரத்தில் இவர்கள் இந்த பொருட்களை சேமித்தோ அல்லது பதுக்கியோ வைத்து மக்களுக்கு செயற்கையான தட்டுப்பாடு வைத்து கொள்ளை லாபம் பார்க்கும் ஆபத்து இருக்கிறது. இப்போ நம்ம முதலமைச்சர் திரு எடப்பாடி அவர்கள் கூட சொல்லி இருக்காரு “யுத்தம், இயற்கைப் பேரழிவு, அபரிமிதமான விலைவாசி உயர்வு இந்த நேரங்களில் மத்திய அரசாணையில் வெளியிடுவதன் மூலம் ஒரு பாதுகாப்பு இருக்கின்றது” என்கிறார். எங்கள் கேள்வியானது சாதாரண நேரங்களில் இவை முடக்கப்பட்டால் நாங்கள் என்ன செய்வது என்பதே. அதற்கான எந்தவிதமான உத்தரவாதமும் இந்த சட்டத்தில் இல்லை. பொருள் கிடைக்கவில்லை என்றால், சாவு! என்பதை மட்டும் தான் அரசாங்கம் சொல்லவில்லையே தவிர அதற்கான அர்த்தம் அதுதான்.

தட்டுப்பாடு நேரங்களில் விலை அதிகமாகும் விலை அதிகமாகும் நேரங்களில் எளிய மக்களால் அதை வாங்க முடியாது. உதாரணமாக அரிசி இப்போது மளிகை கடைகளில் கிலோ 50 ரூபாய்க்கு கிடைக்கிறது, இதே அரிசி 250 ரூபாயாக உயர்ந்தால் எல்லா மக்களாலும் இதை வாங்க முடியாது . அப்போது இந்த சூழ்நிலை மக்களை, ஒன்று மரணத்திற்கு தள்ளும் அல்லது அரிசியை வாங்குவதற்கு கூட தன்னுடைய உடைமைகளை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். அதனால்தான் நாங்கள் இந்த சட்டத்தை முற்றிலும் வாபஸ் வாங்க வேண்டும் என்று போராடுகிறோம்.

அடுத்து விவசாயிகளுக்கான விற்பனை மற்றும் ஒப்பந்த சாகுபடி சட்டத்தின்படி ஒரு விவசாயி யாருடன் வேண்டுமானாலும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அந்த விவசாயி தனிநபராக இருந்தாலும் சரி, அல்லது விவசாயி ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி. இதில் அவர்கள் ஒப்பந்தம் செய்யும்போது கேட்பவையாக என்ன தரம், என்ன அளவு, எந்த நேரம் என்கின்ற ஒன்றை குறிப்பிட வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் கூட அந்த தவறு செய்த விவசாயி மீது ஒரு தனி நபரோ அல்லது அந்த நிறுவனமோ வழக்கு நீதிமன்றத்தில் போடலாம். அப்படி நீதிமன்றத்தில் விவசாயிக்கு அபராதம் போட்டால், ஒவ்வொரு நாளும் 5,000 ரூபாய் வரை அந்த விவசாயிக்கு பெனால்டி போடலாம். இவ்வளவு மோசமான ஒரு சட்டத்தை விவசாயிகளுக்கு விரோதம் விளைவிக்கும் ஒரு சட்டத்தை அமல் செய்து விட்டு இது விவசாயிகளுக்கு சாதகமாக சட்டம் என்று நாட்டினுடைய பிரதமரும், நமது விவசாயி முதலமைச்சரும் கூறுகின்றார்கள்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் அவர்களின் இஷ்டபடி இந்தியாவின் எந்த மூலைக்கும் கொண்டுபோய் விற்கலாம் என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் என்ன என்று பார்த்தால்  இந்தியா கூட அல்ல, உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் அதிக விலைக்கு யார் வருகிறார்களோ அவர்களிடம் விளைவித்த பொருட்களை விற்கலாம் என்று இந்த சட்டம் சொல்கிறது. இவை கேட்பதற்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான கோஷங்களாக இருக்கலாம். ஆனால் இது நடைமுறை என்று வரும்போது எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியும் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு நாம் அதிகம் தர வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். இதுவே நடைமுறை.

அது போக இந்த சட்டத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் விவசாயி தான் விளைவித்த பொருளை விற்கலாம் அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் ஏற்கனவே இருக்கும் ஒன்றை ஏன் நம்மால் பயன்படுத்த முடியவில்லை என்பதே கேள்வி. நான் தொடக்கத்திலேயே சொன்னதைப்போல 85 சதவீதமான விவசாயிகள் சிறு குறு விவசாயிகள். அவர்கள் விளைவித்த சிறு உற்பத்தியை நமது பாரதப் பிரதமரை போன்று வேலை இல்லாமல் நாட்டுக்கு நாடு சென்று விற்க நடைமுறை சாத்தியம் கிடையாது. ஏதோ ஒன்று அல்லது இரண்டு பெரும் விவசாயிகள் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம் தவிர எந்த ஒரு சிறு குறு விவசாயிக்கும் இதற்கான நேரம் இருக்காது.

திரு.ஜி.கே.வாசன் அவர்கள் இந்த சட்டத்தை ஆதரித்து இருக்கின்றார் எனவே அவருக்கு வேண்டுமானால் இது பயன்தரலாம் ஏனென்றால் அவர் மிகப் பெரிய பண்ணையார், பன்னாட்டு கம்பெனிகள் உடன் ஒப்பந்தம் செய்து அவர் வணிகம் செய்ய வாய்ப்புள்ளது. இப்படி எந்த பெரும் நிறுவனம் வேண்டுமானாலும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடலாம். உதாரணமாக பெப்சி கம்பெனி வாழை விவசாயி இடம் ஒப்பந்தம் செய்து இருக்கின்றார் என்றால் அதில் செப்டம்பர் மாதத்திற்குள் வாழை ஒரு டன் தர வேண்டும் என்று ஒப்பந்தத்தில் பதிவிட்டு இருக்கின்றது என்றால், அதற்குள் அந்த விவசாயி அவரிடம் அதை தந்தாக வேண்டும். ஆனால் அப்படி நடைமுறையில் அது சாத்தியமா, ஏனென்றால் விவசாயத்தில் குறிப்பிட்ட நேரத்தில் எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் என்பதல்ல, இயற்கையுடன் இணைந்து மழை பெய்ய வேண்டும், வெயில் சரியான நேரத்தில் அடிக்க வேண்டும். இப்படி சூழலையும் கணக்கெடுத்து தான் விவசாயம் என்பது நடைபெறும். இப்படி நேரத்தை தாண்டி தரம் என்று வேறு சொல்கிறார்கள், இவை அனைத்தையும் கணக்கு கொண்டுதான் விவசாயம் செய்ய வேண்டும். அப்படி அதில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் விவசாயி மீது நேரடியாக அந்த கம்பெனி வழக்குப் போடலாம். எனவேதான் இந்த சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மேலும் இப்படியும் ஒரு விவாதம் இருக்கிறது, இந்த சூழலுக்கு தள்ளப்படும் விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிக்க கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த சூழலுக்கு தள்ளப்படும் விவசாயி இயல்பாகவே அவன் நிலத்தை பறிபோகச் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்.

விற்பனைக்கான சந்தை வாய்ப்பைப் பொருத்த வரைக்கும் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தொடரும். அதே நேரத்தில் வெளியேயும் சந்தை இருக்கும், அதை எந்த தனியார் கம்பெனி வேண்டுமானாலும் நடத்தலாம். உதாரணமாக ஜியோ என்கின்ற பெரும் நிறுவனம் ஒன்று வந்தது. அதனால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு பெரும் நெருக்கடி வந்தது. அதுபோலதான் தனியார் நிறுவனங்கள் பெரிதாக வந்துவிட்டால், அரசின் விற்பனைக் கூடங்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும். துவக்கத்தில் அரசை விட தனியார் விற்பனை கூடங்கள் மலிவான விலைக்கு தரும் . அதை நம்பி வியாபாரிகள் சென்றவுடன் அரசின் கூடங்களுக்கு யாரும் வரமாட்டார்கள் இயல்பாகவே அது அழிந்து போகும். பிறகு தனியார் கூடம் மட்டும் தான் இருக்கின்றது என்றால் அவர்கள் தீர்மானிக்கும் விலையே இறுதி விலை, இதில் ஒரு விவசாயியால் எதுவுமே செய்ய முடியாது.

இடைத்தரகர்கள் என்கின்ற ஒன்றே இந்த சட்டம் அமலுக்கு வந்தால் இருக்காது என்கிறார்கள் இடைத்தரகர்களுக்கு போக வேண்டிய லாபம் அனைத்துமே விவசாயிக்கு போகும் என்கின்றார்கள். ஆனால் உண்மையில் கண்டிப்பாக விவசாயிகளுக்கு அதிக லாபம் போகாது . ஒரு நிறுவனம் அந்த ஏஜெண்டுகளை மையப்படுத்தியே விவசாயிகளிடம் தொடர்புகொள்ளும். இப்போது அந்த ஏஜெண்டுகளுக்கு பதிலாக கம்பெனிகளே நேரடியாக வாங்குவார்கள். எனவே எனக்கு சேர வேண்டிய லாபம் நேரடியாக அந்த நிறுவனங்களுக்கு போய் சேர்ந்து விடும். விவசாயிகளுக்கு இந்த லாபம் போகும் என்பதற்கான எந்தவித உறுதியும் இந்த சட்டத்தில் அளிக்கப்படவில்லை.

MSP என்கின்ற minimum support price என்பதை இந்த மூன்று சட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் குறிப்பிடவில்லை. ஒரு குறைந்தபட்ச விலை என்பது இருந்தால்தான் இதைவிட அவர்களுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்கின்ற ஒரு கட்டாயம் இருக்கும். இதில் குறைந்தபட்ச விலை என்பதே இல்லை, இதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். ஏன் பாரதிய ஜனதாவின் விவசாயிகள் சங்கத்தில் கூட கேட்கலாம். திரு நாராயணன் திவாரி என்கின்ற அகில இந்திய பொதுச் செயலாளர் இதில் MSP குறித்து கொண்டு வர வேண்டும் என்கிறார்.

பாரத பிரதமர் இதை மற்ற இடங்களில் பேசுவதை விட்டு நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசினால் மிகவும் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் நாங்கள் இனி வெற்று வார்த்தைகளை நம்ப தயாராக இல்லை. அதை எழுத்துப்பூர்வமாக சட்டமாக மாற்ற வேண்டும் .

விவசாயிகள் தொடர்ந்து இதற்கு எதிராக தமிழகத்தில் வலுவான குரலைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள். பல மாநிலங்களில் நடந்த மிகப்பெரிய போராட்டங்களால் தான் பிரதமர் அவர்கள் இத்தனை விளக்கங்களை தர அழுத்தங்கள் பெற்றிருக்கின்றார் . ஆனால் பிரதமர் தரக்கூடிய எந்த வாக்குறுதியும் நாங்கள் நம்ப தயாராக இல்லை. கடந்த கால அனுபவங்கள் மிகவும் கசப்பான விவசாயிகளுக்கு அமைந்துள்ளது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற்று விவசாயிகளைப் பாதுகாக்க கூடிய வகையில், கார்ப்பரேட்டுகளிடமிருந்து இந்திய விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் மாற்று சட்டம் வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. ஓய விட கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x