‘இதெல்லாம் ஒரு நடவடிக்கையா?’ டிக்டாக் தடையை விமர்சிக்கும் ராணுவ அதிகாரி
மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவும், கிண்டலும் ஒருசேர எழுந்துள்ளன.
இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனா, 20 இந்திய வீரர்களை கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாமல், இந்திய நிலபரப்பையும் அநியாயமாக ஆக்கிரமித்துள்ளது. இதில், இந்திய தரப்பிலிருந்து இதுவரை சரியான பதிலடி கொடுக்கப்படவில்லை. இந்த குறையை போக்கும் விதமாக, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து, பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் கிண்டலும் எழுந்துள்ளன. ‘இந்தியா அதிரடியாக, எந்த எச்சரிக்கையும் இன்றி செயலிகளை தடை செய்துள்ளது. இந்தியா சமயம் பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவுக்கு மிகப்பெரிய பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இனியாவது சீனா இந்தியாவிடம் வால் ஆட்டாமல் இருக்க வேண்டும்.’ என்று ஆதரவாளர்கள் சிலாகித்து கருத்து பதிவிட்டு உள்ளனர்.
அதேசமயம், எதிர்ப்பாளர்கள் மத்திய அரசின் நடவடிக்கையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த முடிவை விமர்சிப்பவர்கள் கூறியது: ‘நமது நாட்டுக்கு சீனா உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கவில்லை. சீன தூதரை நேரில் அழைத்து கண்டிக்கவில்லை. ஆனால், அற்பத்திலும் அற்பமான பொழுதுபோக்கு உள்ளிட்ட செயலிகளை சீனாவுக்கு சொந்தமானது என்று சொல்லி தடை செய்திருக்கிறது.

சீனாவுக்கு என்ன பாதிப்பு இதனால்? உண்மையில் இதை பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். கேலிக்கூத்தாக இருக்கிறது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இதுதான் நாம் செய்யும் மரியாதையா? இதற்காகத்தான் அவர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களா? இதெல்லாம் ஒரு நடவடிக்கையாகவே கருத முடியாது. ’ என்று ராணுவத்தினரும், தேசபக்தர்களும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.
எனினும், மத்திய அரசு, இவ்வளவு நாட்கள் கழித்து, இதையாவது செய்திருக்கிறதே என்று பொதுமக்கள் தரப்பில் ஆறுதலடைந்து வருகின்றனர். இதனிடையே, டிக்டாக், ஹலோ போன்ற செயலி தடைகளை அடுத்து, இணையத்தில் காமெடி மீம்கள் உலா வருகின்றன.