பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய ‘முக்கிய தலைகள்’ இன்று ஆஜராக மாட்டார்கள்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, மூன்று முக்கிய நபர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட ஆஜராக மாட்டார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், இன்று காலை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர், உமா பாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். எல்.கே.அத்வானி மற்றும் முர்லி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்கள் உடல் நலம் மற்றும் வயது மூப்பு ஆகியவற்றை காரணம் காட்டி நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்கப்போவதில்லை. அதேநேரம், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரில், வினய் கட்டியார், வேதாந்தி, சம்பத் ராய், பவன் பாண்டே லக்னோ வந்து சேர்ந்துள்ளனர்.
இதனிடையே “தண்டனை தந்தால் தூக்கில் கூட தொங்குவேனே தவிர ஜாமீன் கேட்க மாட்டேன். அப்படி நான் ஜாமீன் கேட்பது என்பது அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தில் பங்கேற்ற என்னுடைய ஈடுபாட்டை கேள்விக்குறியாக்கிவிடும்” என்று உமா பாரதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.