ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்.. ஒருவர் உயிரிழப்பு..?

சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டது. தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பையொட்டி சென்னை மெரீனாவில் கொரோனா அச்சத்தையும் மீறி, அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். காமராஜர் சாலையில் போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை இந்த தடை நீடிக்கும். எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தை காண ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் வாலாஜா சாலையில் குவிந்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.