7-வது நாளாக தொடரும் பஞ்சாப் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம்!!
மத்திய அரசின் வேளாண் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் ரயில் மறியல் போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள இடத்தில் விவசாயிகள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ரயில் தண்டவாளத்தின் மீது தற்காலிக கொட்டகை அமைத்துள்ள அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பி வருகின்றனர். பஞ்சாபில் உள்ள கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற விவசாயிகள் சங்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள மூன்று வேளாண் மசோதாக்களும் விவசாயிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தி, நிலமற்றவர்கள் என்ற நிலை ஏற்படும் என்பது இவர்களின் குற்றச்சாட்டாகும். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யாவிட்டால் நாளை முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கப்படும் என்று பஞ்சாப் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
பஞ்சாபில் 7-வது நாளாக நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டத்தால் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிதிநிறுவனங்களுக்கு சாதகமாக உள்ள இந்த மூன்று மசோதாக்களையும் ரத்து செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்று பஞ்சாப் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.