இந்தியா வந்தடைந்தது விவிஐபிகளுக்கான ஏர் இந்தியா ஒன் போயிங் 777-300ER விமானம்!!

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் பிரத்யேக பயன்பட்டிற்காக வாங்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் போயிங் 777-300ER விமானம் டெல்லி வந்தடைந்தது.
இந்தியாவில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணிக்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானமானங்களை போலவே இந்தியா தலைவர்களுக்கு இரு விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை
தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் பயணிக்க உருவாக்கப்பட்ட விவிஐபி ஏர் இந்தியா ஒன் போயிங் 777-300ER முதல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.
ஏர் இந்தியா ஒன் என ஆழைக்கப்படும் இந்த விமானங்கள் முழுக்க முழுக்க குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். 143 டன் எடை கொண்ட இந்த விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன்கொண்டது. படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
பிரமாண்டமான இந்த விமானத்தில் GE90-115BL இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய விமான எஞ்சின்களில் இந்த ரகமும் ஒன்று. அமெரிக்க அதிபருக்காக பயன்படுத்தப்படும் போயிங் 747-200பி விமானத்தில் இருக்கும் அதே ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் இந்த இரண்டு விமானங்களிலும் கொடுக்கப்பட இருக்கிறது. ஏர் இந்தியா ஒன் விமானத்தின் ஸ்பெஷலே ஏவுகணையால் அதைச் சுட்டுவீழ்த்த முடியாது. ஏவுகணைப் பாதுகாப்பு தொழில்நுட்பம் எனப்படும் Large Aircraft Infrared Countermeasures (LAIRCAM) மற்றும் Self-Protection Suites (SPS) தொழில்நுட்பத்தை இந்த விமானம் கொண்டுள்ளது. இந்தியாவில் (SPS) தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானங்கள் இவைதான். (SPS) தொழில்நுட்பம் பொருத்தப் பட்டால், எதிரிகளின் ரேடார்களைச் செயலிழக்க வைக்கமுடியும்.
மேலும் இந்தப் விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை இடைநிறுத்தாமல் பயணிக்கும் திறன் கொண்டவை. இந்த சிறப்பு வாய்ந்த விமானங்களை ஏர் இந்தியா விமானிகள் இயக்க மாட்டார்கள். இதனை நன்கு பயிற்சிபெற்ற விமானப்படை விமானிகள் இயக்கவுள்ளனர். இதில் ஒரு விமானம் தற்போது வந்தடைந்துள்ள நிலையில் மற்றொரு போயிங் விமானம் அடுத்த ஆண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.