சாத்தான் குளம் சம்பவத்துக்கு காவல்துறை காரணம் இல்லை?! – கடம்பூர் ராஜு சலசலப்பு!

சாத்தான் குளத்தில் கடையை அடைக்க 5 நிமிடம் தாமதமானதற்காக தந்தை-மகனை போலீஸார் கொடூரமாக அடித்துக்கொன்றனர். ஆனால், இந்த சம்பவத்திற்கு போலீஸ் காரணம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்திருந்ததாக கூறி, போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று அடித்தே கொன்றனர்.
இதையடுத்து, காவல்துறைக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு உள்ளூர் பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை அனைவரும் நீதி கேட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சி பேதமின்றி, அனைவருமே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். வணிகர் சங்கங்களும் காவல்துறைக்கு எதிராகக் கடையடைப்பு போராட்டம் என எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றன.
இந்நிலையில், காவல்துறைக்கு எதிரான மக்களின் உணர்வை மடைமாற்றும் வகையில், அமைச்சர் கடம்பூர் ராஜு, பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்புக்கு காவல்துறை காரணம் இல்லை; அது லாக்-அப் மரணம் கிடையாது. 2 பேரும் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே சிரையில் அடைக்கப்பட்டனர். சிரையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்குப் பின்னரே தந்தை மகன் உயிரிழந்துள்ளனர். அது தற்செயலாக நடந்ததுதான்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அலட்சியமாக கூறியுள்ளார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
“சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது. 2 பேரும் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்குப் பின்னரே தந்தை மகன் உயிரிழந்துள்ளனர்.” கடம்பூர் ராஜு