“கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?” அறிக்கை தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!

“கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?” என நாளை அறிக்கை தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மூத்த வழக்கறிஞர் அழகுமணி என்பவர் கேந்திரிய வித்யாலய பள்ளி தொடர்பாக ஒரு அவசர வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் நடத்தப்படுகிறது. 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு இங்கு தமிழ் மொழி கற்றுக்கொடுப்பதில்லை. முற்றிலுமாக இங்கு தமிழ் மொழி என்பது புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கல்வியாண்டு தொடங்கப்பட்டு கல்விகள் கற்கப்பட்டு வருகின்றன. எனவே கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய கல்வி மொழியாக ஆக்க வேண்டும். 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதல் மொழியாக தமிழ் மொழியை கற்றுக்கொடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த வழக்கை அவசர வழக்காக நீதிமன்றம் எடுத்துக்கொண்டு ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று முறையிட்டார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக மத்திய அரசு வழக்கறிஞரை அழைத்து, “தமிழகத்தில் செயல்படக்கூடிய கேந்திரிய வித்யாலய பள்ளிகளின் நிலை என்ன? அங்கு தமிழ் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறதா? 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி கட்டாயக் கல்வி மொழியாக உள்ளதா? என்பது குறித்தும் இந்த ஆண்டு கல்வி தொடங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஒரு விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். தொடர்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும் போது இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.