ஹத்ராஸ் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்களை தாக்கிய உத்திரபிரதேச போலீஸார்!

ஹாத்ரஸில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை பார்க்கச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களை உ.பி. போலீசார் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் வெளிநபர்கள் நுழையாத வகையில் மாவட்ட நிர்வாகம் 144  தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகங்களுக்கு அங்கு அறவே அனுமதி கிடையாது.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் ஊர் எல்லைக்கு வெளியே வயல்வெளியில் ஓடி வருவதை பார்த்து அவரை ஊடகங்கள் சூழ்ந்து கொண்டன. அவரை போலீஸ் குழு ஒன்று துரத்தி வருவதையும் தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பின. இதையடுத்து அந்த சிறுவன் வேறு வழியாக தப்பி ஊடகங்கள் முன்பு தோன்றி, “எங்களின் செல்பேசிகளை காவல்துறையினர் பறித்து விட்டனர். எங்களுடைய மாமாவை ஒரு அதிகாரி அடித்து விட்டார். எங்களுடைய குடும்பத்தினர் எப்படியாவது ஊடகங்களை அழைத்துவா, அவர்களுடன் நாங்கள் பேச விரும்புகிறோம் என்று கூறு என்று தெரிவித்து என்னை அனுப்பி வைத்தனர்” என்று கூறினார். அந்த சிறுவனின் பாதுகாப்பு கருதி அவரது பெயரையும், அவரது காட்சிகளையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், இன்று ஹாத்ரஸ் நோக்கிச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் டெரக் ஓ ப்ரெயின், பிரதிமா மொண்டல், முன்னாள் எம்.பி மமதா தாக்கூர் ஆகியோர், அந்த மாவட்ட எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அங்கு மாவட்ட இணை ஆட்சியர் பிரேம் பிரகாஷ் மீனா தலைமையில் காவல்துறையினர் நின்று கொண்டு, “மூன்று பேரும் மேற்கொண்டு செல்ல அனுமதி கிடையாது” என்று தெரிவித்தனர். இதையடுத்து மூன்று பேரும் தங்களின் கைகளை எடுத்துக் கும்பிட்டு, “பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க எங்களுக்கு அனுமதி கொடுங்கள். அது முடியாது போனால், குறைந்தபட்சம் பெண் தலைவர்களையாவது அவர்களை சந்திக்க அனுமதி தாருங்கள்” என்று டெரக் ஓ ப்ரெய்ன் கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு அதிகாரிகள் செவி சாய்க்காத நிலையில், தடையை மீறி நடந்து செல்ல மூன்று பேரும் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திடீரென்று டெரக் ஓ ப்ரெய்ன் கீழே விழுந்தார்.

மற்ற இரு பெண் தலைவர்களில் ஒருவரின் தோளை பிடித்து காவலர்களுடன் இருந்த ஹெல்மெட் அணிந்த அடையாளம் தெரியாத நபர் பின்னோக்கித் தள்ளுவதை பார்க்க முடிந்தது. பிறகு அவர்கள் சாலையில் அமர்ந்து சில நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், அவர்களைச் சுற்றி உத்தர பிரதேச மாநில ஆயுதப்படையினர் சூழந்து கொண்டு மேலும் செல்லக்கூடாது என்று எச்சரித்தனர். இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மூவரும் டெல்லி திரும்பினர்.

இதுகுறித்து பேசிய டெரக் ஓ ப்ரெய்ன், “ஹாத்ரஸ் நோக்கி அமைதியாக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி கூட்டமாக அல்லாமல் தனித் தனியாக நாங்கள் சென்றோம். ஆனால், எங்களை ஏன் அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாங்கள். ஹாத்ரஸில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்து இரங்கல் தெரிவிக்கக் கூட எங்களுக்கு அனுமதியில்லை” என்று தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x