ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை துன்புறுத்தும் உ.பி. காவல்துறையினர்!

இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை உ.பி காவல்துறையினர் துன்புறுத்துவதாக தகவல் வந்ததுள்ளது.
உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் வெளிநபர்கள் நுழையாத வகையில் மாவட்ட நிர்வாகம் 144 தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகங்களுக்கு அங்கு அறவே அனுமதி கிடையாது. ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செய்தியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் நேற்று ஊர் எல்லைக்கு வெளியே வயல்வெளியில் ஓடி வருவதை பார்த்து அவரை ஊடகங்கள் சூழ்ந்து கொண்டன. அவரை போலீஸ் குழு ஒன்று துரத்தியுள்ளது. இதையடுத்து அந்த சிறுவன் வேறு வழியாக தப்பி ஊடகங்கள் முன்பு தோன்றி, “எங்களின் செல்பேசிகளை காவல்துறையினர் பறித்து விட்டனர். எங்களுடைய மாமாவை ஒரு அதிகாரி அடித்து விட்டனர். எங்களுடைய குடும்பத்தினர் எப்படியாவது ஊடகங்களை அழைத்துவா, அவர்களுடன் நாங்கள் பேச விரும்புகிறோம் என்று கூறு என்று தெரிவித்து என்னை அனுப்பி வைத்தனர்” என்று தெரிவித்தார்.
அப்போது திடீரென காவல்துறையினர் வந்ததால் சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். அப்போது காவல் துறையினரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் வரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க செய்தியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.