2000 நோட்டு வச்சிருக்கிங்களா மக்களே… ரொம்ப உஷாரா இருங்க..!

நாட்டில் பணமதிப்பிழப்புக்கு பிறகு 2,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளே அதிகளவு கள்ளநோட்டுகளாக பிடிபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. புதிய நோட்டுகளில் பல்வேறு உயர் பாதுகப்பு அம்சங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், 2018ம் ஆண்டை ஒப்பிடும்போது கடந்த 2019ஆம் ஆண்டில் அதிகளவு கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது. அதன்படி, 2019ம் ஆண்டில் 25 கோடி 39 லட்சம் ரூபாய் மதிப்பில் ரூ.2,000 மதிப்பு கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளது. அதே 2018ம் ஆண்டில் 17 கோடி 95 லட்சம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் பிடிபட்டது.
குறிப்பாக, 2019ம் ஆண்டில் எண்ணிக்கையில் 90 ஆயிரத்து 566 நோட்டுகள் பிடிபட்டுள்ளன. அதிகளவாக கர்நாடகாவில் 23 ஆயிரத்து 599 நோட்டுகளும், குஜராத்தில் 14 ஆயிரத்து 494 ரூபாய் நோட்டுகளும், மேற்குவங்கத்தில் 13 ஆயிரத்து 63 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.