ஒரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த 770 மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிப்பு!!

இங்கிலாந்தின் நியூகேஸில் நகரில் உள்ள நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் பயிலும் 770 மாணவ மாணவியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அந்நகரம் இங்கிலாந்தின் புதிய கொரோனா மையப்புள்ளியாகி உள்ளது.
விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், தங்கள் அறைகளின் ஜன்னல்களில், Covid +’ மற்றும் ‘send beer’ என்ற வாசகங்களை எழுதி ஒட்டியிருப்பதை புகைப்படங்களில் காணமுடிகிறது.
விடுதியில் தங்கியிருப்போருக்கு, பல்கலைக்கழக அதிகாரிகளும், கவுன்சில் ஊழியர்களும் உணவு வழங்குவதோடு அவர்களது துணிகளை துவைத்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இங்கிலாந்தை பொருத்தவரை, குறைந்தது 50 பல்கலைக்கழகங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளதுடன், சுமார் 1,800 மாணவ மாணவியர் மற்றும் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்குகிறதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
செப்டம்பர் 21ஆம் தேதி வகுப்புகள் தொடங்குவதையடுத்து மாணவ மாணவிகள் விடுதிகளுக்கு வந்து சேர்ந்துள்ளதைத் தொடர்ந்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 124 பேருக்கும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 221 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நியூகேஸில் நகரைப் பொருத்தவரை, தொற்று 60 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது, 100,000 பேருக்கு 250 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.இதற்கிடையில், நியூகேஸில் பல்கலைக்கழகமும் கல்லூரி யூனியனும், பல்கலைக்கழக வளாகத்தை திறக்க அதிகாரிகள் எடுத்த முடிவே இந்த தொற்று பரவலுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளதோடு, இதை தவிர்த்திருக்கலாம் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.