“ஹாத்ரஸின் குற்றவாளிகளை சாதி அடிப்படையில் காக்க முயலும் உ.பி அரசு!” சந்திரசேகர் ஆசாத் குற்றச்சாட்டு!

ஹாத்ரஸின் குற்றவாளிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாக்கூர் சமூகத்தினர் என்பதால் உ.பி அரசு அனைவரையும் காக்க முயல்வதாக தலீத் ஆதரவு தலைவரான சந்திரசேகர் ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்திரப்பிரதேசம் ஹாத்ரஸின் கூட்டுப் பலாத்கார சம்பவத்தில் அடுத்தடுத்து பரபரப்புகள் கூடி வருகின்றன. முக்கிய குற்றவாளிகள் நால்வரும் கைதான வழக்கின் விசாரணை, உ.பி மாநில சிறப்பு படை (எஸ்ஐடி)யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சையில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்த ஆசாத், அப்பிரச்சனையை முதன்முறையாக எழுப்பினார். பீம் ஆர்மி எனும் அமைப்பின் தலைவருமான சந்திரசேகர் ஆசாத் ஒரு குற்றச்சாட்டை உபி அரசு மீது சுமத்தியுள்ளார்.
இது குறித்து ஆஸாத் சமூகக் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ஆசாத் கூறும்போது, “பாதிக்கப்பட்ட பெண் பலியானதும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் போலீஸாரே எரித்தது மிகப்பெரிய தவறு. தொடர்ந்து அக்குடும்பத்தின் அடிப்படை உரிமைகள் தடுக்கப்படுகின்றன. உ.பி முதல்வர் தமது சமூகம் என்பதால் தலித் மக்களால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என தாக்கூர் மக்கள் இடையே கர்வம் உள்ளது. இதுபோன்றவர்களை முதல்வர் யோகி அரசு காக்க முயல்கிறது.” எனத் தெரிவித்தார்.

ஹாத்ரஸின் சண்ட்பா கிராமத்தில் செப்டம்பர் 14 இல் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்ந்து உபி காவல்துறை பல்வேறு தவறுகளை செய்வதாகக் கருதப்படுகிறது. சம்பவம் மீதானப் புகார் பதிவு, குற்றவாளிகள் கைதிலும் தாமதமானது. துவக்கத்தில் சாதாரண தாக்குதல் என்று பதிவு செய்த போலீஸார் வற்புறுத்தலுக்கு பின்னர் பலாத்கார வழக்காக மாற்றினர். இதன்மீது உடனடியாக முறையான மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்படவில்லை. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் சிகிச்சையாலும் பலனின்றி பலியான பின் அப்பெண்ணின் உடலை போலீஸாரே எரித்து விட்டனர். இந்த சம்பவம் அப்பெண்ணின் குடும்பத்தாரை மிகவும் பாதித்து விட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திப்பிற்கு விதிக்கப்படும் தடையும் உ.பி அரசிற்கு எதிரான கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.