“அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் பேரழிவின் நிழலில் வாழ்கின்றன!” ஐ.நா எச்சரிக்கை!

உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு நிதியை செலவிடுவதை விட கொரோனாவை ஒழிக்கப் பயன்படுத்தலாம் என்று ஐநாவில் ஈரான் வெளியுறவு அமைச்சர் பேசியுள்ளார்.
அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழித்தல் தினத்தையொட்டி, ஐநா உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பேசிய ஐநா-வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளிடையே தொடரும் பகை, நம்பிக்கையின்மை, பதற்றம் ஆகியவை தீர்க்கப்பட வேண்டியுள்ளது. அதில், அமெரிக்கா-சீனா உறவும், அமெரிக்க-ரஷிய உறவும் பதற்றமாக உள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காஷ்மீரை வைத்து சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்தியா-சீன எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவது என்பது அணு ஆயுத போட்டிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் பேரழிவின் நிழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா, ரஷியா இடையிலான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. அந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டுகளுக்கு உடனே நீட்டிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவேத் ஜரீஃப், “இந்தக் கூட்டம் உலகம் அணு ஆயுதப் போர் என்னும் பேரழிவு கனவிலிருந்து விடுதலை பெற நல்ல வாய்ப்பாக அமையும். ஈரானுடனான ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியேறி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டார். அதேபோல் இஸ்ரேலும் போர் குணம் கொண்ட நாடாக உள்ளது. அதிலிருந்து வெளியேற உலக நாடுகள் அறிவுறுத்த வேண்டும். உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு நிதியை செலவிடுவதை விட கொரோனாவை ஒழிக்கப் பயன்படுத்தலாம்” என்றார்.