பிரிட்டன் – பாகிஸ்தான் இடையே, நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யப்படாததால், நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துவதில், சிக்கல்!!

பிரிட்டனில் உள்ள நவாஸ் ஷெரீப்பை, பாகிஸ்தானுக்கு நாடு கடத்தி அழைத்து வருவது குறித்து, தன் கட்சி நிர்வாகிகளுடன், பிரதமர் இம்ரான் கான் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அண்டை நாடான பாகிஸ்தானில், மூன்று முறை பிரதமராக இருந்த, பாக்., முஸ்லிம் லீக் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப், 70, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியுடன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சிகிச்சைக்காக பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்றார். எனினும், இதுவரை பாகிஸ்தானுக்கு, நவாஸ் ஷெரீப் திரும்பவில்லை.
சமீபத்தில், அவருக்கு கைது ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து நவாஸ் ஷெரீப்பை, நாடு கடத்தி அழைத்து வரும் முயற்சிகளில், பிரதமர் இம்ரான் கான் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆட்சியை கவிழ்க்க, எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்காக, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சித் தலைவர்கள் அடங்கிய ஒரு குழுவை, பிரதமர் இம்ரான் கான் அமைத்திருந்தார். அந்த குழுவுடன், பிரதமர் இம்ரான் கான் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதில், நவாஸ் ஷெரீப்பை, பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதற்கான சட்டரீதியிலான வழியை கண்டறியும்படி, அவர்களிடம் கேட்டுக்கொண்டார். பிரிட்டன் – பாகிஸ்தான் இடையே, நாடு கடத்தல் தொடர்பான ஒப்பந்தம் இதுவரை செய்யப்படாததால், நவாஸ் ஷெரீப்பை, பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.