நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை, 525 காசுகளாக உயர்ந்தது!!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை, வரலாறு காணாத அளவுக்கு 525 காசுகளாக உயர்ந்து உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு 3½ கோடி வரை முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வாரத்தில் 3 நாட்கள் விலை நிர்ணயம் செய்கிறது.
இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை, வரலாறு காணாத அளவுக்கு 525 காசுகளாக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி முட்டையின் கொள்முதல் விலை 516 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவே இதுவரை அதிகபட்ச விலையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 525 காசுகள் என முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.