தூதரக விவகாரத்தில் பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் அதிருப்தி அதிகரிக்க வாய்ப்பு!!

சீனாவில் உய்குர் பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். சீனாவின் ஜின் ஜியான் மாகாணத்தில் அதிகமாக வாழும் இவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என முன்னதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம்சாட்டி இருந்தன. இதற்கு சீனா மறுப்பு தெரிவித்திருந்தது. மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்க, உய்குர் பழங்குடி பெண்களுக்கு சீன அரசு கட்டாய கருத்தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுவந்தது. இதையும் சீனா மறுத்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், சீன அரசு ஓர் ஆதாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி, ‘சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பழங்குடி மக்கள் வாழ வசதியான அடுக்குமாடி குடியிருப்புகள் சீன அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது. இதைச் சர்வதேச ஊடகங்களும் உறுதி செய்தன. மேலும், ‘உய்குர் மக்கள் நாகரிகத்தின் வளர்ச்சிபெற சீன அரசு ஆவண செய்து வருகின்றது’ எனத் தெரிவித்துள்ளது.
உய்குர் பழங்குடி இன மக்கள் பிரச்னை சற்று ஓய்ந்துள்ள நிலையில், சீனாவுக்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள இந்த பழமையான சீன தூதரகத்தை தற்போது 19ம் நூற்றாண்டில் சைனாடவுன் இருந்த பகுதிக்கு மாற்ற சீனா முடிவு செய்துள்ளது. இந்த இடத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு வசிப்பவர்களில் பத்தில் நால்வர் இஸ்லாமியர்கள் ஆவர்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமியர்கள் சீன அரசால் இன்னும் கொடுமைப் படுத்தப்படுவதாக லண்டன் இஸ்லாமியர்கள் நினைக்கின்றனர். ஆகவே இவர்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் சீன தூதரகம் அமைய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அப்பகுதி கவுன்சிலர்கள் பலர் சீனாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தூதரக விவகாரத்தில் பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் அதிருப்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.