“11 நாள் தாமதமாக எடுக்கப்பட்ட மாதிரியால் பலாத்காரத்தை உறுதி செய்ய முடியவில்லை!” அலிகர் மருத்துவக் கல்லூரி தகவல்!!

ஹாத்ரஸில் பலியான பெண்ணிடம் 11 நாள் தாமதமாக மாதிரிகள் எடுக்கப்பட்டதால் பலாத்காரத்தை உறுதிசெய்ய முடியவில்லை என்று அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச ஹாத்ரஸின் சண்ட்பா கிராமத்தின் 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் 14ல் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தாக்கூர் எனும் உயர் சமூக இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தாக்குதல் வழக்கை மட்டும் பதிவு செய்த ஹாத்ரஸ் போலீஸார், உடனடியாக அப்பெண்ணிடம் மருத்துவ மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பவில்லை.இதன் பின்னணியில் அந்த இளைஞர்களை தப்பவிடும் நோக்கம் இருந்ததாகப் புகார் உள்ளது.

இது உறுதியாகும் விதத்தில் தற்போது அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் வெளியிட்டுள்ள தகவல் அமைந்துள்ளது. இது குறித்து அக்கல்லூரியின் முதன்மை மருத்துவ அதிகாரியான டாக்டர்.அஜீம் மல்லிக் கூறும்போது, ”விதிகளின்படி பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் மருத்துவ மாதிரிகள் 96 மணி நேரத்திற்குள் அனுப்பப்பட வேண்டும். ஆனால், இப்பெண்ணின் மாதிரிகள் 11 நாட்களுக்கு பின் அனுப்பியதால் பலாத்காரத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த தாமதமான மருத்துவ அறிக்கையில் எந்த பலனும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

ஹாத்ரஸ் அரசு மருத்துவமனையின் சிகிச்சையில் இருந்த அப்பெண், அன்று இரவு அலிகர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு செப்டம்பர் 22 இல் அப்பெண்ணிற்கு சற்றே நினைவு திரும்பியது. அப்போது விசாரணை நடத்திய ஹாத்ரஸ் போலீஸாரிடம் அப்பெண் தான் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிற்கு அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடந்தது. இதில் கிடைக்காத அறிகுறிகளை உ.பி. போலீஸார், அலிகர் மருத்துவக் கல்லூரியை முன்னிறுத்தி அப்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என நிரூபிக்க முயன்றது. அதேசமயம், 11 நாள் தாமதமாக அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆக்ராவின் அரசு மருத்துவப் பரிசோதனையகத்திற்கு அனுப்பப்பட்டன.
தற்போது உருவாகியுள்ள இந்த திருப்பத்தால் ஹாத்ரஸ் வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரமாக, அப்பெண் ஹாத்ரஸ் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் மட்டுமே மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.