மருத்துவத்திற்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற மூன்று விஞ்ஞானிகள்!!!
ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக, அமெரிக்க விஞ்ஞானிகளான ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹாக்டன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல், அமைதி, இலக்கியம் ஆகிய 6 பிரிவுகளில் இந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதல் நாளான இன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இதில், மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் மைக்கேல் ஹாட்டன் என்ற 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது. ஹெபடைடிஸ் சி வைரசை அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழி வகுத்தது.
BREAKING NEWS:
The 2020 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to Harvey J. Alter, Michael Houghton and Charles M. Rice “for the discovery of Hepatitis C virus.” pic.twitter.com/MDHPmbiFmS— The Nobel Prize (@NobelPrize) October 5, 2020
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ நோபல் பரிசு ட்விட்டர் பக்கத்தில், “தற்போது ஹெபடைடிஸ் சி வைரஸை குணப்படுத்த இயலும். 2020ம் ஆண்டில் மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு ஹெபடைடிஸ் நோய்க்கான காரணங்களையும், அதனை கண்டறியும் வகையிலான ரத்த பரிசோதனைகளையும், மருந்துகளையும் கண்டுபிடிப்பதற்கான வழியை உருவாக்கித் தந்துள்ளனர். தற்போது இந்த ஆராய்ச்சி மூலம் லட்சக்கணக்கான உயிரினங்கள் காப்பாற்றப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் ஹெபடைட்டிஸ் நோய் பாதிப்பால் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதன் மூலம் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்று நோய் பாதிப்பு ஆகியவை ஏற்படும். நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.