வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனை குறித்த முடிவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் விமர்சித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை குறித்த விசாரணை கடந்த 20-ம் தேதி நடைபெற்றது.
அப்போது, தண்டனை குறித்த விசாரணையை வேறொரு அமர்வுக்கு மாற்ற வேண்டும், தண்டனையை அறிவிப்பை ஒத்திவைப்பது தொடர்பான மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரசாந்த் பூஷண் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், அவரது கருத்துக்களை மறுபரிசீலனை செய்யவும் 3 நாட்கள் அவகாசம் வழங்கினர். ஆனால், தண்டனையை ஏற்கத் தயார் என்றும், தனது கருத்துக்களுக்காக ஒருபோதும் மன்னிப்புக் கோர முடியாது என்றும் பிரசாந்த் பூஷண் அன்றைய தினமே திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் அளித்த 3 நாட்கள் கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில், பிரசாந்த் பூஷண் துணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தாம் மன்னிப்பு கேட்கவே முடியாது என திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதித்துறையின் அங்கமாக இருப்பவரே, அதை அழிக்கும் வகையில் செயல்படக் கூடாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, தண்டனை குறித்த முடிவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.