“சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க.. விவசாய கழிவுகளை அழிக்கும் திரவம்” – கெஜ்ரிவால்

டில்லியில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, தீவிர நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. விவசாய கழிவுகளை அழிப்பதற்காக, புது வகை திரவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில், வட மாநிலங்களில் கடும் குளிர் ஆட்டிப்படைப்பது வழக்கம். இந்த மாதங்களில், காற்று பெருமளவு மாசடைந்து, சுவாசிக்கவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்றும் சேர்ந்துள்ளதால், நுரையீரல் பாதிப்புகள் இன்னும் அதிகமாகி, நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சம், மக்களிடையே உள்ளது.
இதற்கு தீர்வு காணும் நடவடிக்கையாக, கடந்த சில நாட்களாக, சுற்றுச்சூழல் நிபுணர்கள் அடங்கிய குழுவுடன், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வந்தார்.
இது குறித்து நேற்று அவர் கூறியதாவது: ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள், தங்கள் வயல்களில் சாகுபடி முடிந்து, எஞ்சிய கூளங்களை எரிப்பதாலேயே, இப்பிரச்னை பெரிதாக உள்ளது. அதற்காக, டில்லி பூசா ஆராய்ச்சி மையம் சார்பில், ஒரு திரவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்துவதன் வாயிலாக, அந்த கூளங்களை, நேரடியாகவே, நிலத்திற்கான உரமாக மாற்றிவிட முடியும். இந்த திரவத்தை, இலவசமாகவே விவசாயி களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘காற்று மாசுபடுவதற்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில், பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை, தீவிரமாக மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.