சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!

உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையால் சென்னையில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 42 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் புதிதாக பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்து வந்த நிலையில், கட்டுப்படுத்துதல் பகுதியும் குறைந்தே காணப்பட்டது. அந்த வகையில் கடந்த 2-ந்தேதி சென்னையில் 10 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்துதல் பகுதியாக உள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னையில் நாள்தோறும் கொரோனாவால் 1,200 முதல் 1,300 என்ற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் சென்னையில் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 42 ஆக அதிகரித்துள்ளது.
அந்த வகையில் அம்பத்தூர் மண்டலத்தில் 21 பகுதிகளும், தேனாம்பேட்டை, ஆலந்தூர், அடையாறு மண்டலத்தில் தலா 4 பகுதிகளும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 பகுதியும், சோழிங்கநல்லூர், திரு.வி.க.நகர் மண்டலத்தில் தலா 2 பகுதிகளும், வளசரவாக்கம், அண்ணாநகர் மண்டலத்தில் தலா ஒரு பகுதியும் இடம்பெற்றுள்ளது.