போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு ஜாமீன்!
![](https://thambattam.com/storage/2020/10/rhea-9-e1602054410112-780x470.jpg)
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையின்போது, போதைப் பொருள் கும்பலின் பின்னணி தெரிய வந்ததையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்களும் (என்சிபி) விசாரணை நடத்தினர். இதில், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பதாக நடிகர் சுசாந்த்தின் காதலியும் நடிகையுமான ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
![](https://thambattam.com/storage/2020/10/rhea-300x169.jpg)
மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே, போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக் ஆகியோரது நீதிமன்றக் காவல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் நடிகை ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.