மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக, நோபல் பரிசை பெற்ற இரு பெண் விஞ்ஞானிகள்!

இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் நாள் மருத்துவத் துறைக்கும், இரண்டாம் நாள் இயற்பியல் துறைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக பெண் விஞ்ஞானிகளான இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ.டவுனா ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் பாக்டீரியத்தின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆய்வு செய்தபோது, ஒரு மூலக்கூறு கருவியைக் கண்டுபிடித்தனர். இது மரபணுவில் துல்லியமான கீறல்களை மேற்கொள்ள உதவுகிறது.

மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றாக CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோலை பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ.வை மிகத் துல்லியமாக மாற்ற முடியும். மூலக்கூறு அறிவியலில் இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தாவர இனப்பெருக்கத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புற்றுநோய் சிகிச்சைகளுக்கும், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தவும் பெரிதும் பயன்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிற துறைகளுக்கான பரிசுகள் அடுத்தடுத்த தினங்களில் அறிவிக்கப்படவுள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x