தஞ்சாவூரில் நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை வைத்த இயற்கை ஆர்வலர்கள்!!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபத்துடன் நூலகம் உருவாக்க வேண்டும் என வேப்பிலை ஏந்தி இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தரப்பு இயற்கை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “தமிழகத்தின் மரமான வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றிருந்த நிலையில் உரிய ஆதாரங்களோடு வேம்புக்கான உரிமையை மீட்டெடுத்து தந்தவர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
இளைய தலைமுறையினர் இயற்கை வேளாண்மை குறித்து அறிந்து கொள்ளவும், இயற்கை வேளாண்மை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு உதவிடும் வகையிலும் நூலகம் அமைக்கப்பட வேண்டும். அதேபோல, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தஞ்சையில் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நம்மாழ்வார் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.