தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்தது மத்திய அரசு!

தமிழகத்தில் இருந்து வந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழ் உள்பட 10 மொழிகளை தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்துள்ளது.
அண்மையில் மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனத்தில் 2020-22ம் ஆண்டில் இரண்டு முதுகலை பட்டயப் படிப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. இதில் குறைந்த பட்ச கல்வித்தகுதியாக செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இவற்றில் சமஸ்கிருதம் 2005ம் ஆண்டுதான் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2004ம் ஆண்டு இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழி இந்த அறிவிப்பில் புறக்கணிக்கப்பட்டது.

இதற்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பல மொழிகளின் 48 ஆயிரம் கல்வெட்டுகளில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானவை தமிழில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியையும் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார்.