50 மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்ட தொழிலதிபர்! கடைசியில் நடந்த சோகம்

பெங்களூரு எஸ்.பி. ரோடு அருகே நகரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது நபர். பெரும் ஜவுளிக்கடை தொழில் அதிபரான இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு படுக்கை காலியாக இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும், படுக்கை காலியாக இல்லை என்று சொல்லப்பட்டது. இவ்வாறாக கடந்த 27 மற்றும் 28 ஆகிய இருதினங்களில், 50 மருத்துவமனைகளுக்கு மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டுள்ளார் அந்த தொழிலதிபர்.
51வது மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வந்தால்தான் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, அந்த அறிக்கையுடன் மீண்டும் 51வது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதை ஆய்வு செய்த டாக்டர்கள் தொழிலதிபரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்பத்திரி வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பெங்களூரு மேயர் கவுதம் குமார், “இது வெட்கக்கேடான விஷயம். நான் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தி உத்தரவிட்டுள்ளேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நான் உதவி செய்ய முடியாதவனாக நிற்கிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.