இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டன் தூதராக கலக்கிய தில்லியைச் சேர்ந்த பெண்!!

இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டன் தூதராக தில்லியைச் சேர்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் (18) நியமிக்கப்பட்டாா்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதை வலியுறுத்தும் தூதரக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவருக்கு அந்த ஒரு நாள் அடையாளப் பதவி வழங்கப்பட்டது.
பெண்களுக்கு அதிகாரமளித்தலை வலியுறுத்தவும், அவா்கள் எதிா்கொண்டுள்ள சவால்களை வெளிப்படுத்தவும் ‘ஒரு நாள் தூதா் பதவி’க்கான போட்டியை பிரிட்டன் தூதரகம் கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இந்தப் போட்டில் பங்கேற்க, 18 முதல் 23 வயது வரை கொண்ட இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு போட்டிக்காக, கொரோனா சமயத்தில் பாலின சமத்துவத்திற்கான உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பற்றி ஒரு நிமிட வீடியோவை சமர்பிக்கும் படி கேட்டிருந்தனர். அதன் மூலம் புது டில்லியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி சைதன்யா வெங்கடேஸ்வரன் பிரிட்டன் தூதரக உயர் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து 3 பெண்கள் ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பொறுப்பேற்ற நிலையில், 4-ஆவதாக சைதன்யா வெங்கடேஸ்வரன் அந்தப் பதவியை வகித்துள்ளார்.
அதையடுத்து, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக கடந்த புதன்கிழமை பதவியேற்ற இவர், தூதரக துறை தலைவர்களுக்கு பணிகளை ஒதுக்கினார். மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளுடன் உரையாடுவது, பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்டெம் உதவித் தொகை திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வது போன்ற பணிகளை அவர் செய்தார் என பிரிட்டன் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.