இந்தியாவின் அதிவேக ரயில்களில், இனி அனைத்து பெட்டிகளுக்கும் ‘ஏசி’ வசதி… ரயில்வே துறை அறிவிப்பு!

“மணிக்கு, 130 கி.மீ.,க்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படும், அதிவேக ரயில்களில் இனி அனைத்து பெட்டிகளும், ‘ஏசி’ வசதி உடையதாகவே இருக்கும்” என, ரயில்வே துறைதெரிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர், டி.ஜே. நாராயணன் கூறுகையில், “தற்போது, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், அதிகபட்சமாக, மணிக்கு, 80 – 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. மற்றும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற அதிவேக ரயில்கள், அதிகபட்சம், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை, 130 – 160 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில், ரயில் பாதைகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
மணிக்கு, 130 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்கப்படும் ரயில்களில், அனைத்து பெட்டிகளும், ‘ஏசி’ வசதி உடையதாக இருக்க வேண்டியது தொழில்நுட்ப ரீதியில் அவசியமாகிறது. அதனால், மணிக்கு 130 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், இனி, அனைத்து பெட்டிகளும், ‘ஏசி’ வசதி உடையதாகவே இருக்கும்.
அதிவேக ரயில்களில், அனைத்து பெட்டிகளும், ‘ஏசி’ வசதி உடையதாக இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருக்காது. சிறந்த வசதிகள் கிடைப்பதுடன், பயண நேரம் குறையும்.” இவ்வாறு அவர் கூறினார்.