தனது மனைவியை காப்பாற்ற, தட்டு ரிக்சாவில் 90 கி.மீ பயணித்த 70 வயது முதியவர்!

தனது மனைவியை காப்பாற்ற, 70 வயது முதியவர் ஒருவர் சைக்கிள் தட்டு ரிக்சாவில் 90 கிலோ மீட்டர் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
70 வயதான அந்த மனிதர் ஒடிசாவின் பூரி மாவட்டத்தை சேர்ந்தவர். கபீர் பாய் என்று அறியப்படும் அந்த நபர் மனைவியை பூரி மாவட்டத்தில் உள்ள சுகந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவர்கள் அவரை வேறு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
கட்டாக்ல் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பண வசதி இல்லாததால், கபீர் மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்துள்ளது. எனவே ஒரு ஆட்டோ ரிக்சாவை வாடகைக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் 1200 ரூபாய் வாடகை கேட்டதால் தன்னால் கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளார் கபீர்.

பின், 50 ரூபாய்க்கு சைக்கிள் தட்டு ரிக்சா ஒன்றை வாடகைக்கு எடுத்த கபீர் அதில், மனைவியை அமர வைத்து 90 கிலோ மீட்டர் பயணித்துள்ளார். மனைவியை கட்டாக் மருத்துவமனையில் சேர்க்க சில சமூக ஆர்வலர்கள் உதவியுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள கபீர் “ஒரு வருடங்களுக்கு மேலாக என் மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது நல்ல மருத்துவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனைவியை அனுமதித்த எஸ்.சி.பி மருத்துவமனை, அவருக்கு இலவசமான மருத்துவம் பார்க்க முன்வந்தது. ஆனால், கபீரின் மனைவி சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.