கொரோனா தடுப்பூசி ஆய்வை உடனடியாக நிறுத்திய ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம்!
![](https://thambattam.com/storage/2020/10/johnson-johnson-coronavirus-vaccine-final-1596173811-780x470.jpg)
அமெரிக்காவின் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஏற்பட்ட பிரச்சனையால் தனது ஆய்வை நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட Johnson & Johnson நிறுவனம் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது அளித்த அறிக்கையில் “கொரோனா தடுப்பூசி ஆய்வில் பங்கேற்ற ஒருவருக்கு, விவரிக்கப்படாத நோய் ஏற்பட்டதன் காரணமாக, அந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை உட்பட, தங்களது கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட பங்கேற்பாளரின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும், இந்த பங்கேற்பாளரின் நோயைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம் என்றும், தீவிரமாக ஆராய்ந்த பின் உண்மை நிலை குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த முடிவை அடுத்து, 60,000 நோயாளிகளின் மருத்துவ பரிசோதனைக்கான ஆன்லைன் சேர்க்கை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது தனி அதிகாரம் கொண்ட, நோயாளி பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/09/coronavirus_vaccine_doctor_syringe_needle_1200x630-300x158.jpg)
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom Ghebreyesus) பேசுகையில், “கோவிட் -19 தடுப்பூசிக்காக உலகம் காத்திருக்க முடியாது. நம்மிடம் உள்ள மருந்துகள், கருவிகளைக் கொண்டு உயிரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார்.
ஊடகங்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் கடந்த நான்கு நாட்களில் பல நகரங்கள் மற்றும் நாடுகளில், பதிவாகும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த நிலை கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.