கொரோனாவில் தாக்கப்பட்டு மீண்டாலும், முகக்கவசத்தை தூக்கி எறிந்து அலட்சியம் காட்டும் டிரம்ப்!
கொரோனாவிலிருந்து மீண்ட ட்ரம்ப், தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி முகக்கவசத்தை தூக்கி எறிந்தது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
கொரோனா உறுதியான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு வெள்ளை மாளிகை திரும்பினார். இந்த நிலையில் திங்கள்கிழமை மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிய டிரம்ப், புளோரிடாவின் சான்ஃபோர்டில் நடந்த பேரணியில் பங்கேற்றார்.
சமூக இடைவெளி இல்லாமல் நடைபெற்ற இந்தப் பேரணியில் பெரும்பான்மையானோர் முகக்கவசமின்றி பங்கேற்றனர். இதில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “நான் இப்போது கொரோனாவைக் கடந்துவிட்டேன். நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன். உங்கள் அனைவரையும் நான் முத்தமிடுவேன். ஆண்களையும், அழகானப் பெண்களையும் முத்தமிடுவேன்.” எனக்கூறி தனது முகக்கவசத்தை ஆதரவாளர்களை நோக்கி வீசி எறிந்தார்.
இதனையடுத்து கொரோனா தொற்று விவகாரத்தில் ட்ரம்ப் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 80 லட்சத்து 37 ஆயிரத்து 789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 11 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.