“புலிகளுக்கு மாட்டிறைச்சி வழங்கக் கூடாது” போராட்டம் நடத்தி மண்ணைக் கவ்விய பாஜக கட்சியினர்!

அசாம் மாநிலத்தில் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிகளுக்கு மாட்டிறைச்சி வழங்கக்கூடாது எனக் கூறி பாஜகவினர் போராட்டம் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசாம் மாநிலம் கெளஹாத்தியில் மிருகக்காட்சி சாலை உள்ளது. இதில் மான்கள், புலிகள், குரங்குகள் உள்பட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள புலிகளுக்கு உணவாக மாட்டிறைச்சி வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் அசாம் மாநில பாஜக முன்னணி தலைவராக உள்ள சத்ய ரஞ்சன் போரா தனது ஆதரவாளர்களுடன் மிருகக்காட்சி சாலைக்கு இறைச்சி ஏற்றி வரும் வாகனத்தை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
“மாட்டை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இது மிருகக்காட்சிசாலையில் உள்ள புலிகளுக்கு மாமிச உணவில் பிரதானமானதாக இருக்கிறது. ஏன் மாட்டிறைச்சியைப் பரிமாற வேண்டும்? ஏன் மற்ற இறைச்சியை புலிகள் சாப்பிட கொடுக்கக்கூடாது?” என அவர்கள் தெரிவித்தனர். பசுக்களுக்கு பதிலாக சாம்பார் மானின் இறைச்சியை புலிகளுக்கு வழங்க வேண்டும் என வாக்குவாதமிட்ட பாஜகவினர் பசு பாதுகாப்பு கோஷங்களை எழுப்பினர்.
சாம்பார் மான் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் “பாதுகாக்கப்பட வேண்டியவை” என்று பட்டியலிடப்பட்டுள்ளதால் அவற்றை புலிகளுக்கு இறைச்சியாக வழங்க முடியாது எனத் தெரிவித்த மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் விலங்குகளுக்கு அவற்றின் ஊட்டச்சத்துக்கு மாட்டிறைச்சி அவசியம்” என விளக்கமளித்தனர்.