அடித்து பிடித்து வழக்கை வாபஸ் வாங்கிய ரஜினிகாந்த்!!

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார்.
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதித்து சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு எதிராக ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் விதிமுறைகளின்படி, சொத்து வரியை பாதியாக குறைத்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாள்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? சொத்து வரியை குறைக்கக் கோரி மாநகராட்சிக்கு அளித்த கடிதத்தின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகவும், இது தொடர்ந்தால், அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று நீதிபதி கூறியதால், வழக்கை தாமே வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறிய நிலையில், வழக்கு வாபஸ் பெறப்பட்டது.