“அண்ணா பல்கலைத் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து சூரப்பாவை நீக்க வேண்டும்” இரா.முத்தரசன் வலியுறுத்தல்!

அத்துமீறிவரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முத்தரசன் இன்று (அக். 14) வெளியிட்ட அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்து அத்துமீறிய செயலில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாக கல்லூரிகள் இயக்கம் மார்ச் 2020 முதல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் இளநிலை பட்டப்படிப்பில் பயின்று வந்த மாணவர்கள் இறுதிப் பருவத் தேர்வு எழுத முடியாத நெருக்கடி ஏற்பட்டது.
இதனை உணர்ந்த கல்வியாளர்கள் இறுதிப் பருவத்தேர்வு எழுத வேண்டியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது. இதில் தலையிட்ட அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், அகில இந்திய தொழில்நுட்பக் குழு, தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்காது என்று அறிக்கை வெளியிட்டு குழப்பம் விளைவித்தார்.
இப்போது, மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தை உயர் சிறப்பு தகுதிக்கு தரம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு பெரும் நிதி ஒதுக்க வேண்டும். கொரோனா நோய் தொற்று பாதிப்பால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட துணைவேந்தர் சூரப்பா, வரலாற்றுப் பெருமையும், தலைசிறந்த பல்திறன் ஆளுமைகளை உருவாக்கிய சாதனையும் கண்ட அண்ணா பல்கலைக்கழகத்தை லாபகரமான கல்வி வியாபாரச் சந்தையாக மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் மூலம் அடித்தட்டு மக்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி உரிமைக்கு பெரும் கேடு விளைவித்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அரசின் நிதி அவசியமில்லை; மாறாக எமது திட்டத்தை ஏற்றுக் கொண்டால் லாபமீட்டிக் காட்டுவேன் என சவால் விட்டுள்ளார்.
கல்விக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துவதன் மூலம் அடித்தட்டு மக்களின் உயர் கல்வி வாய்ப்பை முற்றாக நிராகரித்துள்ளார். துணைவேந்தரின் திட்டம் சூது நிறைந்தது. முதல்வரிடம் கூறிய கருத்தையே மத்திய அரசுக்குக் கடிதமாக எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுத முதல்வர் ஒப்புதல் அளித்தாரா? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். மாநில அரசின் உரிமையை ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மறுக்க முடியும் எனில் அது அசாதாரண நிலையின் அடையாளமாகும்.
இந்தச் சூழலில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் சூரப்பா நீடிப்பது நல்லதல்ல. அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.