“ஹாத்ரஸில் பட்டியலின பெண்ணின் உடலை போலீஸார் தகனம் செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறல்!” அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்!!

ஹாத்ரஸில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணை இரவு நேரத்தில் போலீஸார் தகனம் செய்தது மனித உரிமை மீறல் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்ரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டுவந்த போலீஸார் தகனம் செய்தனர். வலுக்கட்டாயமாக பெண்ணின் உடலைத் தகனம் செய்ய போலீஸார் நிர்பந்தத்தினர் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
நாளேடுகளிலும், காட்சி ஊடகங்களிலும் இந்தச் செய்தி பெரும் பரபரப்பானது. இந்தச் சம்பவத்தையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்ப்ரீத் சிங் ஆகியோர் தாமாக முன்வந்து ஹாத்ரஸ் சம்பவத்தை வழக்காகப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், கூடுதல் ஏடிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராகி ஹாத்ரஸ் சம்பவம் குறித்து திங்கள்கிழமை விரிவான விளக்கம் அளித்தனர். ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இருவரும் ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பான நீதிமன்றத்தில் நேரில் விளக்கம் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் தங்களின் விளக்கத்தை நேற்று முன்தினம் அளித்தனர்.

அப்போது நீதிபதிகளிடம் “தங்களின் மகளை ஒருமுறைகூட பார்க்க போலீஸார் அனுமதிக்கவில்லை. தங்கள் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்ய வீட்டுக்கு ஒருமுறைகூட கொண்டு செல்லவிடவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ராஜன் ராய் ஆகியோர் 11 பக்க அளவில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இந்த உத்தரவுகள் அனைத்தும் நீதிமன்ற இணையதளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டன. அதில், இந்த வழக்கில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ராஜன் ராய் இருவரும் அதிகாரிகளையும், போலீஸாரையும் கடுமையாகச் சாடினர். பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். “பாதிக்கப்பட்ட பெண்ணின் குணத்தை, ஒழுக்கத்தை குலைக்கும் வகையில் பொய்யான கருத்துக்களை பரப்புவதை ஏற்க முடியாது. அதைத் தடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் பாதிக்கப்பட்ட பெண் குறித்து விமர்சிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று எந்த தடயவியல் அறிக்கை தெரிவிக்கிறது, எந்த அடிப்படையில் தெரிவிக்கிறது என்று சட்டம்ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார், ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமார் ஆகியோருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பலாத்காரம் என்ற கேள்விக்கு உங்களுக்குச் சட்டத்தில் உள்ள விளக்கம் தெரியுமா என்று இரு அதிகாரிகளையும் நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர்.
ஹாத்ரஸ் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்வாறு தகனம் செய்ய வேண்டும் என்பதற்கு மாநில அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த விதமான இறுதிச்சடங்கும் செய்யாமல் போலீஸார் எரித்துள்ளனர். அந்த பெண்ணின் உறவினர்கள்,பெற்றோர் கூட அந்த பெண்ணைப் பார்க்க அனுமதிக்கவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று தெரிவித்தனர்
அதற்கு மாநில அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், “மிகவும் பதற்றமான சூழலில் அந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இருந்தது” எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். “நிர்வாக ரீதியாக நீங்கள் கூறும் எந்த விளக்கத்தையும் நாங்கள் ஏற்க முடியாது. அந்த குடும்பத்தாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை ஏன் வழங்கவில்லை? குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஒப்படைத்து, வீட்டில் இறுதிச்சடங்கு செய்ய அனுமதித்திருக்கலாம். அல்லது அடுத்த நாள் இறுதிச்சடங்கு செய்திருக்கலாம். கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பார்க்க வேண்டும் என்று குடும்பத்தினர் கூறியபோதும் அதிகாரிகள் மறுத்துள்ளார்கள். அவர்களின் வேண்டுகோள் தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஏன் மாவட்ட கண்காணிப்பாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் விர் இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடத்தும் சிறப்பு விசாரணைக் குழுவினர், சிபிஐ அமைப்பு எந்த விவரங்களையும் வெளியே கசியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.
இந்த வழக்கில், விசாரணையில் நேரடியாக தொடர்பில்லாத அதிகாரிகள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க கூடாது. மக்கள் மத்தியில் எந்தவிதமான ஊக செய்திகள் வலம் வரக்கூடாது.
இந்த வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அன்றைய தினம் ஹாத்ரஸ் மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும்” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்