எப்படி ரூ.1570 கோடியை திரட்ட முடியும் என்று துணைவேந்தர் சூரப்பாவுக்கு தமிழக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

அண்ணா பல்கலைக்கழகத்தால் எப்படி ரூ.1570 கோடி திரட்ட முடியுமென சூரப்பாவுக்கு தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா “உயர்நிலை சிறப்பு தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதி பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடர்பு போன்ற பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்
மேலும், 5 ஆண்டுகளில் ரூ.1,500 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.314 கோடி திரட்ட முடியும். எனவே மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்க முடியும். இதனால் உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்.
மாணவர்களின் தேர்வுக் கட்டணம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் செலுத்தும் இணைப்புக் கட்டணம் (affiliation fees) மற்றும் சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் நிதியை அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்க முடியும்” என்றும் துணை வேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தால் எப்படி ரூ.1570 கோடி நிதியை திரட்ட முடியும் என கடிதத்தில் தமிழக அரசு சூரப்பாவுக்கு கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டுள்ளது.