தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு! 

தெலங்கானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக இதுவரை பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகா் மற்றும் பல இடங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறு இடங்களில் சுவா்கள், வீடுகள் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. ஹைதராபாத்தில் 25 பேரும் மஹபூப்நகர் மாவட்டத்தில் 7 பேரும் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததாலும், வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால், வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளம் காரணமாக சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செடிகள் நாசமாகின. வெள்ளம் சூழ்ந்து தரைப்பாலங்கள், பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் பல கிராமங்கள், பிற பகுதிகளுடன் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளன.

கொட்டித் தீா்த்த கனமழை காரணமாக அத்தியாவசிய சேவை துறைகள் தவிர அனைத்து அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு வியாழக்கிழமையும் மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இன்னும் இரண்டு தினங்களுக்கு அங்கு கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்க அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிா்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.டி. ராமராவ், கால்நடைத்துறை அமைச்சா் தலசானி ஸ்ரீநிவாஸ் ஆகியோா் மூத்த அதிகாரிகளுடன் மீட்புப்பணி, நிவாரணப்பணிகள் குறித்து அவசர ஆலோசனை நடத்தினா்.

ஷாம்சாபாத் நகரில் ககன்பாத் என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்து குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோந்த 3 பேர் உயிரிழந்தனா். சந்திரயங்குட்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 இடங்களில் சுவா் இடிந்து விழுந்ததில் 10 பேர் இறந்தனா். இப்ராஹிம்பட்டிணம் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் 40 வயது பெண்ணும், அவரது மகளும் பலியாயினா்.

ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. பத்ராத்ரி-கோத்தகூடம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நீா்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் அந்த சாலைகளில் பயணம் செய்ய வேண்டாவென எச்சரிக்கை விடப்பட்டது.

நிலைமையை எதிா்கொள்ள தயாராக இருக்கும்படி அனைத்து மாவட்டங்ளும் மாநில பொதுச்செயலா் சோமேஷ் குமாா் உத்தரவிட்டாா். போலீஸாா் மற்றும் பேரிடா் மீட்பு குழுவினா்(டிஆா்எஃப்) வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஹைதராபாத், அதைச்சுற்றியுள்ள இடங்களில் வியாழக்கிழமையில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x