“அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை!” தமிழக அரசு முடிவு!!

அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள முக்கிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு, சீர்மிகு சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதற்காக கூடுதல் நிதி உதவி செய்யும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேர தமிழக உயர்கல்வி துறையும், அண்ணா பல்கலையும் இணைந்து விண்ணப்பித்தன.
இதற்கு, மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. ஆனால், பல்வேறு அரசியல் காரணமாகவும், நிதி பற்றாக்குறை காரணமாகவும், மத்திய அரசின் அந்தஸ்தை பெறுவதில், தமிழக உயர்கல்வி துறை தயக்கம் காட்டி வருகிறது. உயர் அந்தஸ்து பெற்றால், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டது.
தர்மபுரியில் நிருபர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்கூறியதாவது; “அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், 69 சதவீத இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும். கல்விக்கட்டணம் அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நுழைவுத்தேர்வு வர வாய்ப்பு உள்ளது. இதனால், உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.
அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரித்தாலும் அண்ணா பெயர் மாற்றப்படாது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில் தான் உள்ளோம். இதனால் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.