சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அடுத்தாண்டு முதல் வைஃபை வசதி…!

சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வை ஃபை வசதியை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் இரண்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் வசதிக்காக, பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது. மெட்ரோ ரயில் இயக்கப்படும் 24 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை வழித்தடத்தில் பெரும்பாலும் செல்லிடப்பேசிகளுக்கு சிக்னல் கிடைக்காமல் உள்ளது.
எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் வை ஃபை இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பயணிகள் இலவசமாக இணையவழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மெட்ரோ ரயிலின் உயா்த்தப்பட்ட பாதை மற்றும் பூமிக்கடியில் சுரங்கப்பாதைகளில் சிக்னல்கள் வலுவாக இருந்தால், பயணிகள் ரயிலில் பயணிக்கும்போதும் இணையத்தைப் பயன்படுத்தமுடியும்.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 45 கி.மீ. வழித்தடங்களில் ஆப்டிக்கல் ஃபைபா் கேபிள்களை நிறுவும் பணி விரைவில் தொடங்கும். இந்தத் திட்டத்தில் கேபிள்கள் மற்றும் அணுகல் புள்ளிகளை நிறுவுவதற்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம். ஏனெனில், இதற்கான பணிகள் தினசரி ரயில் இயக்கம் முடிந்தபிறகு, இரவில் சில மணி நேரங்களுக்கு மட்டுமே நடைபெறும். பயணிகளுக்கு இணையதளம் பயன்படுத்துவது வரம்பற்ற காலமாக இருக்குமா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இருக்குமா என்பது குறித்து இன்னும் தீா்மானிக்கப்படவில்லை” என்றனா்.
தற்போது, சில சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் இரு செல்லிடப்பேசி நிறுவனங்கள் இணைப்பு வழங்குகின்றன. ஆனால், நிலையங்களின் உள்பகுதிகள் கருப்பு புள்ளியாக உள்ளது. மேலும், இணைப்பு குறைவாக இருக்கும். மெட்ரோ ரயில் பயணிகள் பெரும்பாலும் பூமிக்கடியில் உள்ள நிலையங்களில் பயணிக்கும்போது, அவா்கள் ஸ்மாா்ட் போன்களில் எந்த சிக்னலும் இல்லாமல் பயணிக்கின்றனா்.