ஹாத்ரஸ் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்து ரத்தக் கறை படிந்த ஆடைகளை கைப்பற்றிய சிபிஐ!!

ஹாத்ரஸ் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து ரத்தக் கறையுடைய ஆடைகளை சிபிஐ போலீஸார் கண்டெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்துக்குட்பட்ட கிராமத்தில் கடந்த மாதம் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லவ் குஷ் சிகர்வார் என்பவர் வீட்டிலிருந்து ரத்தக் கறையுடைய ஆடைகளை சிபிஐ போலீஸார் கண்டெடுத்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து லவ் குஷ் வீட்டில் சிபிஐ போலீஸார் கேட்டபோது, லவ் குஷ்ஷின் அண்ணன் ரவி சிகர்வார், பெயின்ட் பூசும் வேலை செய்பவர் என்றும், அந்தத் துணிகளில் உள்ளது ரத்தம் இல்லையென்றும், அது வெறும் பெயிண்ட்தான் என்றும் தெரிவித்தனர். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அந்த சிவப்பு நிறத் துணியை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக லவ் குஷ்ஷின் தம்பி லலித் சிகர்வார் தெரிவித்தார்.