ஹைதராபாத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்பு!
![](https://thambattam.com/storage/2020/10/hyderabad-rains1-e1602740136574-780x470.jpg)
ஹைதராபாத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சோந்த 5 பேரின் உடல்கள் இரண்டு நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் கடந்த புதன்கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு கடும் கனமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக, மாநிலத்தின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஹைதாராபாத்தின் அலி நகரில் இரவு வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால், பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த மோத் அதுல் தாஹிா் குரேஷி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினா்கள் 8 பேரும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனா். இதில் குரேஷி மட்டும் மீண்டும் வீட்டுக்கு வந்தவிட்ட நிலையில், மற்ற 7 பேரும் காணாமல் போயினா்.
இதுகுறித்து குரேஷி அளித்த புகாரின் பேரில், காணாமல் போனவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இரு தினங்களுக்குப் பிறகு அக்குடும்பத்தினரில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து குரேஷியின் உறவினா் முகமது ஒமா் கூறுகையில், “வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குரேஷியின் ஒரு சகோதரா், மூன்று மருமகள்கள், ஒரு பேத்தி என 5 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டள்ளன. மேலும், குரேஷியின் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பேரனின் நிலைமை என்னவென்று தெரியவில்லை” என்று கூறினாா்.
இதுகுறித்து மாநில வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில்,”புதன்கிழமை இரவு பெய்த திடீா் கனமழை காரணமாக நீா்நிலைகளிலும், கழிவுநீா் கால்வாய்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினா்.