ஈமு கோழி மோசடிகாரர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை!!

ஈமு கோழி திட்டத்தில், 2.40 கோடி ரூபாய் மோசடி செய்த இருவருக்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பொல்லிகள்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது உறவினர் கண்ணுசாமி. இருவரும் இணைந்து, 2011ம் ஆண்டு, பெருந்துறை பட்டக்காரன்பாளையத்தில், ஆர்.கே., ஈமு பார்ம்ஸ் அண்ட் பவுல்டரி எனும் நிறுவனத்தை துவங்கினர்.
110 பேர் நிறுவனத்தில், 2.4 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.
முதலீட்டாளர்களுக்கு உரிய முதிர்வு தொகை தரப்படாததால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெருமாம்பாளையத்தை கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், மோகனசுந்தரம், கண்ணுசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். கடந்த, 2014ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதுகுறித்த வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி ரவி, குற்றச்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா, 10 ஆண்டுகள் சிறை மற்றும் மொத்தம், 1.21 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத் தொகையில், 1.2 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டார். குற்றவாளிகள் நேற்று ஆஜராகாததால், இருவரையும் கைது செய்ய, கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது.