முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 12ம் தேதி காலமானார். முதல்வரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தவுசாயம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மூத்த அமைச்சர்களும், அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் 7 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி, பசுமை வழிச்சாலை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தாயார் தவுசாயம்மாளின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் இல்லத்திற்கு வந்து அவரது தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு முதல்வர் பழனிசாமிக்கு, ஸ்டாலின் ஆறுதல் கூறினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
