மன அழுத்தம் காரணமாம்… காக்கிக்கு முட்டுக்கொடுக்கும் தமிழக அரசு

மன அழுத்தம் காரணமாகவே, விசாரிக்க வந்த நீதித்துறை நடுவரை, ‘உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா’ என்று சாத்தான்குளம் காவலர்கள் மரியாதைக் குறைவாகப் பேசியதாக அரசுதரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசாரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இந்த சூழலில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்குச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மாஜிஸ்திரேட் சென்றார். அப்போது, காவல்துறையினர் நீதித்துறை நடுவர் நடத்திய விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமல் புறக்கணித்தனர்.
குறிப்பாக, போலீஸ் மகாராஜன் என்பவன், ‘உன்னால் ஒன்றும் புடுங்க முடியாதுடா’ என்று நீதித்துறை நடுவரையே இழிவாகப் பேசியுள்ளான். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவலர்களின் நீதிமன்ற விரோத போக்கை கண்டு அதிர்ச்சியடைந்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இதன்படி, ஏ.எஸ்.பி. குமார் மற்றும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தனர். நீதிபதியைத் தரக்குறைவாகப் பேசிய காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.
மேலும், ஏ.எஸ்.பி குமார் உள்ளிட்ட காவல் துறையினரை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ‘மூவரும் செய்தது தவறுதான். இருப்பினும் அதிக மன அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றுள்ளது’ என்றார்.
இதையடுத்து, ‘ஏன் இப்படி பிரச்னையை பெரிதாக்குகிறீர்கள்?’ என்று அரசு வழக்கறிஞரிடம் சராமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.