சாலையில் சிதறிக் கிடந்த சென்னை பல்கலை விடைத்தாள் பேப்பர்கள்.. காவல்துறை விசாரணை!!
கரூர் அருகே சாலையில் சிதறிக் கிடந்த பல்கலைக்கழக விடைத்தாள் பேப்பரால் மக்கள் திகைத்தபடி நின்றனர்.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.புதுக்கோட்டை பகுதியில் வாகனம் ஒன்று வேகமாக கரூர் நோக்கி சென்றது. அப்போது அந்த வாகனத்தில் இருந்து பேப்பர் கட்டுகள் பறந்து கீழே விழுந்தன. ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் அதனை கண்டு கொள்ளாமால் சென்றனர். அந்த பேப்பர்கள் அனைத்தும் பல்கலைக்கழக தேர்வில் எழுதப்பட்ட திருத்தப்படாத விடைத்தாள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் மாயனூர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், விடைத்தாள் முகப்பில் சென்னை பல்கலைக்கழகம் என்று எழுதப்பட்டு இருந்ததால், சென்னையில் இருந்து வந்ததா என்றும், வாகனத்தில் இருந்து தவறுதலாக விழுந்ததா , இல்லையெனில் வேண்டுமென்றே வீதியில் விட்டு செல்லப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.